Prayer for protection Download PDF
வானத்தை சிங்காசனமாகவும், பூமியை பாத படியாகவும் வைத்து ஆட்சி செய்யும் சர்வ வல்ல தேவனுக்கு மகிமை செலுத்துகின்றோம். மகிமையானவரே, உம்முடைய மக்களாகிய எங்களின் துதி பாடல்களை ஏற்று, எங்களை பரிசுத்தப்படுத்தி உயர்த்தும்.
இந்த ஏழையின் மனக்கதறல்களை கேட்டு, எங்கள் கண்ணீரை ஏற்றுக்கொண்டு, எங்கள் மேல் மனம் இறங்கும்.
உன்னதத்தில் இருந்து புறப்படுகின்ற துதிகளாகிய தேவர்களின் குரலோடும், சேனைகளின் குரலோடும், எங்கள் குரலையும் இணைத்துக்கொள்ளும். எங்கள் ஜெபங்களையும், துதிகளையும் தகுதியுள்ள பலியாக ஏற்றுக்கொள்வீராக.
உம்மோடு இணைக்கக்கூடாதபடிக்கு எங்களுடைய பாவங்களினாலும், பொல்லாத எண்ணங்களினாலும், சிந்தனையினாலும், நாவினால் விலக்கப்பட்டதை உண்டும்; அறியாமையினாலும், மடமையினாலும், கைகளினால் தவறான காரியங்களைச் செய்து, உம்மை விட்டு விலகினோம் எங்களை மன்னியும்.
பொல்லாத தீங்குக்கு விலக்கப்படும்படியாக உம்முடைய சிலுவையை உற்றுப் பார்க்கின்றோம். உம்முடைய சிலுவையின் பாடுகளையும், வேதனைகளையும் நீர் சிந்திய இரத்தத்தையும் மறவாமல் நினைவில் வைத்து, மனம் வருந்தி, ஜெபம் செய்து அதற்க்குள்ளாக மறைந்து கொள்கின்றோம்.
உம்முடைய இரத்தம் எங்கள் மேல் தெளிக்கப்படும் படியாக, இலவசமாய் கொடுக்கப்பட்ட உம்முடைய இரத்தத்தினாலே எங்களை கழுவும் படி மன்றாடுகின்றோம். எங்கள் வீட்டு வாசலின் நிலையின் மேற்சட்டத்திலும், நிலைக்கால்கள் இரண்டிலும் உம்முடைய இரத்தத்தை நீர் தெளிக்கும் படியாக மன்றாடுகின்றோம்.
தேவனுடைய வார்த்தைகள் வேண்டாம் என்று விலகிச்சென்றோம். தேவனுடைய வார்த்தையை நிராகரித்தோம், உம்முடைய வார்த்தையிலிருந்து புறப்படுகின்ற ஜீவனுள்ள சத்தத்தை நிராகரித்தோம். குஞ்சுகள் தன் தாயை மிதிக்கின்றதை போல, அரிதாக கொடுக்கப்படுகின்ற ஜீவனுள்ள வார்த்தைகளை எளிதாக்கப்பெற்றும், அந்த வார்த்தைகளை புறக்கணித்து உம்மை விட்டு விலகிப்போனோம், எங்களை மன்னியும்.
தேவனுடைய வார்த்தைகளை நாங்கள் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய இரத்தத்தினாலே எங்களை தூய்மைப்படுத்திக்கொள்கின்றோம். அந்த ஜீவனுள்ள வார்த்தைகளின் வழியாக வாழவும், வாழ்வின் வாசலுக்குள் செல்லவும் முற்படுகின்றோம்.
தேவன் மேல் உள்ள அச்சத்தை தவிர்த்து, உலகத்தின் காரியங்களில் அச்சத்தை செலுத்தி விசுவாசத்தை அவித்து போட்டோம், எங்களை மன்னியும். விசுவாசத்தின் தொடக்கமும் முடிவுமானவரே எங்களுக்குள் வாரும், எங்களுக்கு விசுவாசத்தை தாரும். எங்களுக்குள் இருக்கும் விசுவாசத்தை நாங்கள் உயர்த்தி கொள்கின்றோம்.
நீர் நோவாவையும் அவரோடு அழைக்கப்பட்டவர்களையும் பேழைக்குள் வைத்துக் காத்துக்கொண்டது போல, எங்களையும் உம்முடைய “இயேசு” என்ற நாமத்தின் பேழைக்குள்ளாக மறைத்துகொள்வீராக.
உம்முடைய வார்த்தைகளை உள்ளத்தில் வைத்து சுமக்கின்றவர்களாக, தீமையை விட்டு விலகி நன்மையின் பாதையில் நடக்கின்றோம். உமது வலது கரத்தின் வலிமையுடனும், மகத்துவத்துடனும் எங்களை காத்துக்கொள்ளும். விதியின் கட்டுக்களிலிருந்து எங்களை விடுவித்தருளும். இந்த மண்ணான மனிதனை, உம்முடைய பரிசுத்தத்துக்குள்ளும், தயவுக்குள்ளும், கிருபைக்குள்ளும் மூடிக்கொள்வீராக.
கோழி தன் குஞ்சுகளை தன் செட்டைகளுக்கு கீழ் வைத்து பாதுகாத்துக் கொள்வதை போல, தேவாதி தேவன் உம்முடைய செட்டைகளை விரித்து பொல்லாப்புக்கு எங்களை விலக்கி பாதுகாத்துகொள்வீராக.
உம்முடைய உன்னத ராஜ்யத்தின் திருப்பெயர் சதாகாலமும் ஆசீர்வதிக்கப்படுவதாக, ஆமென்!!!!!!
சங்கீதம் 51
- தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.
- என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.
- என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.
- தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது, உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.
- இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.
- இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.
- நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும்; அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.
- நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படிச் செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும்.
- என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.
- தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.
- உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.
- உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.
- அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்.
- தேவனே, என்னை இரட்சிக்குந்தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப் பாடும்.
- ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.
- பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.
- தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.
- சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களைக் கட்டுவீராக.
- அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின் பலிகளில் பிரியப்படுவீர்; அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள்.
சங்கீதம் 148
- அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.
- அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்; அவருடைய சேனைகளே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்.
- சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; பிரகாசமுள்ள சகல நட்சத்திரங்களே, அவரைத் துதியுங்கள்.
- வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; ஆகாயமண்டலத்தின் மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள்.
- அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.
- அவர் அவைகளை என்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத பிரமாணத்தை அவைகளுக்கு நியமித்தார்.
- பூமியிலுள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; மகாமச்சங்களே, சகல ஆழங்களே,
- அக்கினியே, கல்மழையே, உறைந்த மழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே,
- மலைகளே, சகல மேடுகளே, கனிமரங்களே, சகல கேதுருக்களே,
- காட்டுமிருகங்களே, சகல நாட்டு மிருகங்களே, ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே,
- பூமியின் ராஜாக்களே, சகல ஜனங்களே, பிரபுக்களே, பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளே,
- வாலிபரே, கன்னிகைகளே, முதிர் வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.
- அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.
- அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும், தம்மைச் சேர்ந்த ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரருக்கும் கொண்டாட்டமாக, தம்முடைய ஜனத்திற்கு ஒரு கொம்பை உயர்த்தினார். அல்லேலூயா.